மயிலாடுதுறையில் புத்துணர்வுடன் செயல்பட போலீசாருக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடந்தது!!



மயிலாடுதுறையில் போலீசாருக்கு மன அழுத்தத்தை போக்கி புத்துணர்ச்சியுடன் செயல்பட நேற்று காலை சிறப்பு கவாத்து பயிற்சி வகுப்பு நடந்தது. இந்த பயிற்சி வகுப்பு நடை பயிற்சியுடன் தொடங்கியது. மயிலாடுதுறை போலீஸ் நிலையம் அருகில் தொடங்கிய நடைபயிற்சி, காந்திஜி ரோடு, பட்டமங்கலத்தெரு, திருவிழந்தூர் திருமஞ்சன வீதி, பரிமளரங்கநாத பெருமாள் கோவில் வீதிகள் உட்பட நகரின் பல்வேறு வீதிகளின் வழியாக சென்று தொடங்கிய இடத்திலேயே முடிவடைந்தது. தொடர்ந்து டி.இ.எல்.சி. தேவாலயத்தின் வளாகத்தில் போலீசாருக்கு உடல் திறன் பயிற்சி நடந்தது. இதில் மயிலாடுதுறையில் உள்ள போலீஸ் நிலையம், அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், மதுவிலக்கு பிரிவு மற்றும் குத்தாலம், பாலையூர், பெரம்பூர், செம்பனார்கோவில், மணல்மேடு, பாகசாலை உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயிற்சியை மேற்கொண்டனர்.