மயிலாடுதுறை நகராட்சியின் கதை!



மயிலாடுதுறை நகராட்சி 1886 நவம்பர் மாதம் 1ந் தேதி அமைக்கப்பட்டது. அப்போது “நகராண்மைக் கழகம்” என்று பெயர். மொத்தம் 11 உறுப்பினர்கள் இருந்தனர். ஊரின் பெயர் “மாயவரம்” என்று இருந்தது. 1948ல் “மாயூரம்” என்று மாற்றம் செய்யப்பட்டு, 08.06.1982 ல் “மயிலாடுதுறை” என்று பெயர் சூட்டப்பட்டது.
1867ல் மயிலாடுதுறை நகராட்சியுடன் திருஇந்தளூர், சேர்க்கப்பட்டு, நகர எல்லை விரிந்தது. 1916ல் புது அக்ரகாரம், தம்பிக்கு நல்லான் பட்டினம் ஆகியவை சேர்த்துக் கொள்ளப்பட்டன. 1928 ல் சித்தர்காடு இணைத்துக் கொள்ளபட்டது.
அப்போது மாவட்ட கலெக்டர் தான் நகராட்சி தலைவராக இருந்தார். துணை கலெக்டர் உதவி தலைவராக இருந்தார். 1817 ல் வரி செலுத்துவோர் மட்டுமே நகரசபை உறுப்பினர்களை தேர்ந்தெடுத்தனர். அப்போது உறுப்பினர்களுக்கு “ஆணையர்” என்று பெயர்.
ஆங்கிலேயர்களை கிரேஸ், பார்க்கர், அட்சின், பரோசு, கிளென்சி, மார்டின், வெல்ட், போர்பீசு ஆகியோர் அடுத்தடுத்து நகரசபை தலைவர்களாக இருந்தனர்.
பிறகு சீனிவாச ராவ், கிருஷ்ணா ராவ், என 2 ராவ்கள் இந்த பதவியில் இருந்தனர். ஓய்வு பெற்ற நீதிபதியான வேதநாயகம் 1873 ல் தலைவராக நியமிக்கப்பட்டார். மயிலாடுதுறை நகரசபையில் தலைவர் பதவி வகித்த முதல் தமிழர் இவர் தான்.
1885 முதல் நகரசபை தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முதல் தலைவர் அழகப்ப பிள்ளை ஆவார். அப்போது உறுப்பினர்களின் எண்ணிக்கை 18 ஆகும். பின்னர் 1923 ல் 20 பேராகவும், 1931 ல் 24 பேராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்கள் தற்போது 36 பேராக உள்ளனர்.
முன்னதாக மூன்றாவது நிலையில் இருந்த மயிலாடுதுறை நகராட்சி, 1.4.1949 ல் 2 வது நிலைக்கும், 1969 ல் முதல் நிலைக்கும் உயர்த்தப்பட்டது.
1934 முதல் நகராட்சி ஆணையாளர்கள் நியமிக்கப் பட்டார்கள். முதல் ஆணையாளர் குலாம் நபி சாகேப் ஆவார்.
நகரசபை கட்டிடம் கட்ட மயிலாடுதுறை பெரிய கோவிலில் நிலம் 1916 ல் ரூ.204 க்கு வாங்கப்பட்டது. தற்போது மயிலாடுதுறை நகராட்சியின் பரப்பளவு 11.27 சதுர கிலோ மீட்டர் ஆகும்.
Advertisement