திருவையாறு பகுதியில் மழையுடன் திடீர் சூறாவளி: 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் முறிந்து சேதம்!



தஞ்சாவூர்: திருவையாறு பகுதியில் மழையுடன் வீசிய சூறாவளியால், 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரிப் படுகை பகுதியில் நெல் சாகுபடிக்கு அடுத்தபடியாக வாழை பயிரிடப்பட்டு வருகிறது. குறிப்பாக, திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, நடுக்காவேரி, நடுப்படுகை உள்ளிட்ட பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், திருவையாறு பகுதியில் நேற்று முன்தினம் மாலை அரை மணிநேரம் மழையுடன் கூடிய சூறாவளி வீசியது. இதனால், திருவையாறு அருகே வடுகக்குடி, ஆச்சனூர், மருவூர், நடுப்படுகை உள்ளிட்ட பகுதி வயல்களில் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் வாழைத்தாருடன் முறிந்து விழுந்து சேதமடைந்தன.
முறிந்து விழுந்த வாழைத்தார்களில் உள்ள வாழைக்காய்கள் முதிர்ச்சி அடையாமல் இருந்ததால், அவை விலை போக வாய்ப்பில்லை. எனவே, இப்பகுதியில் ரூ.50 லட்சம் வரை தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வாழை விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட வாழை உற்பத்தியாளர் சங்கத் தலைவர் மதியழகன் கூறியது: வாழைக்கு பயிர்க் காப்பீடு செய்திருந்தாலும், பேரிடர் காலத்தில் அல்லது குறிப்பிட்ட பரப்பில் 50 சதவீதத்துக்கு மேல் பாதிப்பு இருந்தால் மட்டுமே தோட்டக்கலைத் துறையினரால் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, இழப்பீடு வழங்கப்படுகிறது.
கிராம அளவில் மழை, காற்று உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்பட்டால், சேதம் குறித்து கணக்கெடுத்து இழப்பீடு வழங்கப்படுவது இல்லை. தற்போது, இந்த பகுதியில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட வாழைகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், எங்களின் நீண்டநாள் கோரிக்கையான, இயற்கை சீற்றங்களின்போது நெல்லுக்கு நிவாரணம் வழங்குவதுபோல, வாழைக்கும் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Advertisement