19th January 2022

தமிழ் புதினத்தின் தந்தை மாயூரம் வேதநாயகம் பிள்ளைக்கு மணிமண்டபம் அமைக்கக் கோரிக்கை

காலத்தை வென்று நிற்கும் அரிய இலக்கியங்களைத் தமிழுக்கு ஆரமாக சூட்டிய மாமனிதர் மாயூரம் வேதநாயகம் பிள்ளைக்கு மயிலாடுதுறையில் மணி மண்டபம் அமைத்து, நீதிமன்றம் மற்றும் நகராட்சி அலுவலக வளாகத்தில் அவருடைய சிலையுடன் கூடிய நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என பொதுமக்களும், தமிழ் ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதினத்தின் தந்தை, தமிழில் சட்ட நூல் தந்த முன்னோடி, பெண் விடுதலை பேசிய சீர்திருத்தவாதி, இசைப் புலவர், முதல் இந்திய நீதிபதி என்னும் பல்வேறு சிறப்புகளைக் கொண்டவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை.

மயிலாடுதுறையில் வாழ்ந்த காலத்தில் பெரும் புகழ் பெற்றதால் தன் பெயருக்கு முன்னால் மாயூரம் என ஊர் பெயரை இணைத்து மாயூரம் வேதநாயகம் பிள்ளை யானார். இவர் தன் உள்ளத்தில் தோன்றிய நீதிக் கருத்துக்களை பாடல்களாக எழுதி வைப்பது வழக்கம். எளிமையும், இனிமையும் கொண்ட இந்தப் பாடல்கள், மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை ஊக்கத்தால் நூலாகத் தொகுக்கப் பட்டு 1858- ஆம் ஆண்டில் வெளியானது மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் நீதி நூல்.

தமிழ் மொழி வளர தமிழில் சிறந்த புதினங்கள் உருவாக வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டிருந்த மாயூரம் வேதநாயகம் பிள்ளையால் இயற்றப்பட்டு, 1879-ல் வெளியிடப்பட்டது பிரதாப முதலியார் சரித்திரம் என்ற புதினம். இதுவே தமிழில் வெளியான முதல் புதினம் என்ற பெருமைக்குரியது

ஆங்கிலத்தில் இருந்து நீதி, நிர்வாகம் தொடர்பான சட்டங்களை தமிழில் மொழி பெயர்த்து ‘சித்தாந்த சங்கிரகம்’ என்ற நூலை 1862 -இல் வெளியிட்டார் இதன் மூலம் தமிழில் நீதி நூல் தந்த முன்னோடி என்ற சிறப்புக்குரியவர் ஆனார் வேதநாயகம். பெண்களின் முன்னேற்றத்துக்காக பெண் கல்வி, பெண் மானம், பெண்மதி மாலை ஆகிய நூல்கள் எழுதினார். இவர் எழுதிய பெண்கல்வி என்ற நூலில் பெண்களின் முன்னேற்றத்துக்காக எழுதப்பட்ட தனி நூல் என்ற பெருமைக்குரியது.

தமிழ்ப் பணி, நீதி பணி ஆகியவற்றுடன் பொது பணியிலும் ஈடுபாடு கொண்டிருந்த மாயூரம் வேதநாயகம்பிள்ளை, பஞ்சத்தால் மக்கள் பரிதவிப்பதைக் கண்டு உள்ளம் பதைத்து, கஞ்சித்தொட்டி அமைத்தார். 1872-ஆம் ஆண்டில் நீதிப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற வேதநாயகம்பிள்ளை தனது நண்பர்களின் உந்துதலால் மயிலாடுதுறை நகராட்சித் தேர்தலில் போட்டியிட்டு, மயிலாடுதுறையின் நகராட்சித் தலைவரானார். இந்தப் பதவி காலத்தில் குடிநீர் வசதி, குடியிருப்பு வசதி, பூங்கா, கல்வி நிறுவனங்கள், சிலம்பக் கூடங்கள் ஆகியவற்றை மயிலாடுதுறையில் ஏற்படுத்தினார். எண்ணற்ற சிறப்புகளைத் தன்னகத்தே கொண்ட விடிவெள்ளி மாயூரம் வேதநாயகம் பிள்ளை 1889 -ஆம் ஆண்டு, ஜூலை 21-ஆம் தேதி மறைந்தார்.

இந்த மாமனிதரின் நினைவாக தற்போது மயிலாடுதுறையில் கத்தோலிக்க கிறிஸ்தவ திருச்பையினரால் அமைக்கப்பட்ட அவரது சிலை காந்திஜி சாலையில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் நூல்கள் அரசுடமையாக்கப்பட்டன. நூல்களை நாட்டுடமையமாக்கியதுடன் கடமை முடிந்து விட்டதாகக் கருதியதோ என்னவோ தமிழக அரசு மாயூரம் வேதநாயகம் பிள்ளைக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை கண்டு கொள்ளவேயில்லை என ஆதங்கப்படுகின்றனர் தமிழறிஞர்கள். இதனால், மாயூரம் வேதநாயகம் பிள்ளை தமிழக அரசால் மறக்கப்பட்டாரா என்ற சந்தேகமும் எழத் தொடங்கியுள்ளது தமிழ் அறிஞர்கள் மத்தியில்.

‘தமிழ் புதினத்தின் தந்தை’ என்று அழைக்கப்படும் மாயூரம் வேதநாயகம்பிள்ளையின் பிறந்தநாளை கடந்த இரண்டு ஆண்டுகளாக மயிலாடுதுறை தமிழ்ச் சங்க நிறுவனர் ஜெனிபர் பவுல்ராஜ் தலைமையில் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து சிறப்பித்து வருகின்றனர்.

தமிழறிஞர்களுக்கு பல்வேறு பெருமைகளையும், பாராட்டுகளையும் வழங்கி வரும் தமிழக அரசு மயிலாடுதுறையில் வேதநாயகம் பிள்ளைக்கு மணிமண்டபம் அமைத்து, நீதிமன்றம் மற்றும் நகராட்சி அலுவலக வளாகத்தில் நினைவு சின்னம் அமைக்க வேண்டும். மேலும், தமிழக அரசு ஆண்டுதோறும் ஒரு விழா நடத்தி அவரின் பெருமைமிகு பணிகளுக்கு புகழாரம் சூட்ட வேண்டும் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

செய்தி : குணசீலன் / ஒளிப்பதிவு : யோகேஸ் & யோகுதாஸ்

Leave a Reply

You cannot copy content of this page