30th November 2021

தமிழக முதல்வர் நடத்திய கொரோனா தடுப்பு தொடர்பான ஆய்வு கூட்ட முக்கிய முடிவுகள்

தமிழக அரசு கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்க தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் பொது மக்களின் நன்மை கருதி குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144 தடை உத்தரவு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது. மேலும் ஏற்கனவே மேற்கொண்டுள்ள மற்றும் மேற்கொள்ளப்போகும் நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாநகர காவல் ஆணையர்கள், நகர ஆணையர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர்கள் ஆகியோருடன் காணொலி காட்சி மூலம் கலந்தாய்வு தமிழக முதலமைச்சர் அவர்களின் தலைமையில் நேற்று நடைபெற்றது.

கலந்தாய்வில் எடுக்கப்பட்ட முடிவின்படி, பின்வரும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது:

 • ஊரடங்கு உத்தரவினால் ஏற்படக்கூடிய இடையூறுகளை தவிர்க்கவும், மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய சேவைகளும் தடையின்றி கிடைக்கவும் மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் கொண்ட 9 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு அவர்கள் தலைமையில் பணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும்.
 • பல கிராமங்களிலும், நகரங்களிலும் தனியார் வங்கிகள், சிறிய நிதி நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள் ஆகியவை தினசரி/ வாராந்திர/மாத வட்டி மற்றும் அசல் வசூல் செய்கின்றன. தற்போது ஊரடங்கு உத்தரவினால் யாரும் வேலைக்கு செல்ல இயலாத நிலையில், இதுபோன்ற பணம் வசூலை உடனடியாக மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க வேண்டும், இந்த உத்தரவினை மீறுபவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கைகள் தொடரப்படும் என எச்சரிக்கப்படுகின்றனர்.
 • பெரிய காய்கறி மார்க்கெட் / சந்தை இருக்குமிடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கும் வகையில், காய்கறி/ பழ வகையான கடைகள் விசாலமான இடங்களில் அல்லது மைதானத்தில் அமைக்க வேண்டும்.
 • மக்கள் அதிகம் வாழும் குடிசை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தீயணைப்பு இயந்திரங்கள் மூலமாக கிருமிநாசினி தெளிக்கப்பட வேண்டும்.
 • இந்த நோய்த் தொற்று மிக மிக கடுமையானது என்பதையும், இது ஒரு ஆட்கொல்லி நோய் என்பதையும் மக்கள் உணரும் வண்ணம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
 • கர்ப்பிணி பெண்கள், ரத்த கொதிப்பு, நீரிழிவு, காசநோய், எச்ஐவி தொற்று உள்ளோர் போன்றவர்கள் அரசு மருத்துவமனைகளில் மருந்து மாத்திரைகளை பெறுகின்றனர். அவர்களுக்கு இரு மாதங்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் வழங்கப்பட வேண்டும்.
 • அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தி மற்றும் நகர்வுகள் தடையின்றி நடைபெற பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்திலும் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவி மையம் அமைக்கப்படும்.
 • முதியோர், நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள், டயாலிசிஸ் சிகிச்சை பெறுவோர் ஆகியோருக்கு அவசர உதவி தேவைப்பட்டால், அவர்கள் 108 எண்ணை தொடர்பு கொள்ளலாம். 108 ஆம்புலன்ஸ் சேவையுடன், இச்சேவையையும் இணைத்து செயல்பட வேண்டும்.
 • அரசால் அறிவிக்கப்பட்ட சிறப்பு நிவாரணம் முழுமையாக பயனாளிகளை சென்றடைவதையும், இவை வழங்கும்போது சமூக தொற்று உள்ளிட்ட சுகாதார பாதுகாப்பு விழிப்புணர்வு வழிமுறைகளையும் முழுமையாக பின்பற்றுவதை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்ய வேண்டும்.
 • வெளிநாட்டில் இருந்து வந்த சுமார் 54 ஆயிரம் பேர்களின் பட்டியல் மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களை அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்த வேண்டும், அவர்கள் வெளியே வராமல் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்படுகிறது.
 • கொரோனா தொற்று உடையோருடன் தொடர்பில் இருந்தோர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இத்தகைய குடும்பத்தினர் வெளியில் வருவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளதால், அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை மாவட்ட ஆட்சியர் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதையும் மீறி வெளியில் வருவோர் மீது அபராதம் விதிப்பதோடு, தகுந்த பிரிவுகளில் குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும்.

மேற்கண்ட இந்த அனைத்து நடவடிக்கைகளும் பொதுமக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் எடுக்கப்பட்டவை. இதனை உணர்ந்து அரசு உத்தரவுகளை பொதுமக்கள் தவறாக தீவிரமாக கடைபிடித்து தங்களை தற்காத்துக்கொள்ளவேண்டும். இந்த சவாலான நேரத்தில் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

You cannot copy content of this page