தஞ்சாவூர்: திட்டை குரு கோவிலில் குருபெயர்ச்சி விழா; பந்தக்கால் நடப்பட்டது!



தஞ்சாவூர் : குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு, திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் (குரு பரிகாரத்தலம்) பந்தக்கால் நடப்பட்டது.குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு ஆண்டுக்கு ஒருமுறை இடம்பெயர்வது, குரு பெயர்ச்சி என அழைக்கப்படுகிறது. அதன்படி வரும், 14ம் தேதி, குரு பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார்.
இதையடுத்து தஞ்சாவூர் அருகே குரு பரிகாரத்தலம் என போற்றப்படும், திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில், வசிஷ்டேஸ்வரர், குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டன. பின்னர் பந்தகால் மரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, முகூர்த்தம் செய்து நடப்பட்டது. இதில் கோவில் செயல் அலுவலர் தனலெட்சுமி மற்றும் உபயதாரர்கள், ஊர் பொதுமக்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
குரு பெயர்ச்சி , 14ம் தேதி அதிகாலை 4:16 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பிரவேசிக்கிறார். இடம் பெயர்வதால் மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிகாரர்கள் பரிகாரம் செய்து கொள்ளலாம். குரு பெயர்ச்சியை முன்னிட்டு 24ம் தேதி ஒரு நாள் மட்டும் லட்சார்ச்சனை நடைபெறுகிறது. அதேபோல் 29ம் தேதி மற்றும் 30ம் தேதியில் சிறப்பு பரிகார ஹோமம் நடக்கிறது.
இதில் பரிகாரம் செய்ய வேண்டிய பக்தர்கள், அதற்கான தொகையை கோவில் நிர்வாகத்தில் செலுத்தி ரசீதை பெற்றுக்கொள்ளலாம். அதற்கான பிரசாதம் தபால் மூலம் மட்டுமே அனுப்பி வைக்கப்படும் என்று, கோவில் செயல் அலுவலர் தனலட்சுமி தெரிவித்தார்.
Advertisement