20th September 2021

முதுபெரும் தமிழறிஞர் புலவர் இளங்குமரனாரின் மறைவு தமிழ்மொழிக்கும் தமிழ்நாட்டுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் : மு.க.ஸ்டாலின் இரங்கல்!!

சென்னை: முதுபெரும் தமிழறிஞர் புலவர் இரா.இளங்குமரனார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இரா.இளங்குமரனார் மறைவு தமிழ்நாட்டுக்கும் தமிழ் மொழிக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என அவர் கூறியுள்ளார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி

தமிழையே உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்த முதுபெரும் அறிஞரான அய்யா இளங்குமரனார் அவர்களின் மறைவு தமிழ்மொழிக்கும் தமிழ்நாட்டுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். இலக்கணச் செழுமையும் இலக்கிய வளமும் கொண்ட தமிழ் மொழியை – அதன் பண்பாட்டைத் தமிழர்களின் இல்லந்தோறும் நிலைநிறுத்திடுவதற்காக தனது 94-ஆவது அகவையிலும் தொடர்ந்து பணியாற்றியவர் இளங்குமரனார் அவர்கள்.

தமிழ்மறையாம் குறள்நெறி வழியில் தமிழர்களின் திருமணங்களை முன்னின்று நடத்தியதுடன், வள்ளுவர் தவச்சாலை என்பதை நிறுவி, வெள்ளுடை ஞானியாக வாழ்ந்தவர். புத்தாயிரம் (2000) ஆண்டு தொடக்கத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் குமரி முனையில் 133 அடி உயரத்தில் அய்யன் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்த மகத்தான நிகழ்வில், அய்யா இளங்குமரனார் அவர்கள் பங்கேற்று உரையாற்றியது தனிச்சிறப்பாகும்.

வடமொழி – பிறமொழி ஆதிக்கத்திலிருந்து தமிழைப் பாதுகாக்கும் முனைப்புடன், சமஸ்கிருத மந்திரங்களை முற்றிலும் தவிர்த்து, 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருமணங்களை திருக்குறள் ஓதியும் – தமிழில் வாழ்த்தியும் நடத்தி வைத்தவர் அய்யா இளங்குமரனார். அடுத்தடுத்த தலைமுறைகளிலும் தமிழ் தழைத்திருக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் 500-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். பழந்தமிழர் வாழ்வியல் அடிப்படையில் உடல்நலன் காக்கும் முறைகளையும் அவர் தொடர்ந்து கடைப்பிடித்து, நலவாழ்வு வாழ்ந்து, அவற்றை இன்றைய இளைஞர்களும் பின்பற்றும் வழிமுறைகளைக் கற்றுத் தந்தவர்.
இளங்குமரனார் அவர்களின் உடை போலவே அவரது உள்ளமும் தூய்மையானது. அயராது அவர் மேற்கொண்ட தமிழ்ப்பணி போற்றுதலுக்குரியது.

அய்யா இளங்குமரனாரின் மறைவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழ்ச்சான்றோர்கள் அனைவருக்கும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையிலும் தனிப்பட்ட முறையிலும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் போல என்றென்றும் நிலைத்திருக்கும் அய்யா இளங்குமரனாரின் இறவாப் புகழ்!

 

Soruce:https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=693169

More News

மயிலாடுதுறையில் மருத்துவர், செவிலியர்களுக்கு சேவை செம்மல் விருது

admin See author's posts

நவம்பர் 18-ம் தேதி தியாக திருநாளாக கொண்டாடப்படும்..!!

admin See author's posts

நீலகிரி: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் மதுபானம்!

admin See author's posts

கடலூர் மாவட்டம் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் அருகே கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை!

admin See author's posts

தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலைவாய்ப்பு!

admin See author's posts

நடிகை மீரா மிதுன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு!

admin See author's posts

மயிலாடுதுறை: நெல் கொள்முதல் நிலையம் திறக்க அனுமதி வழங்கப்படாததால் மூங்கில் தோட்டம் கடைவீதியில் விவசாயிகள் திடீர் சாலை மறியல்!

admin See author's posts

மதுபானங்களின் விலை உயர்வு அமலுக்கு வந்தது; மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!

admin See author's posts

சீா்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சாா்பில் பாரம்பரிய நெல் திருவிழா!

admin See author's posts

மனைவி மறைவால் கண் கலங்கிய ஓபிஎஸ்: கைகளைப் பிடித்து ஆறுதல் கூறினார் சசிகலா!

admin See author's posts

You cannot copy content of this page