திருவாரூர் தியாகராஜர் கோயிலில் இன்று ஆழித் தேரோட்டம்… லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!



ஆசியாவில் மிகப்பெரிய தேராக கருதப்படும் திருவாரூர் ஆழித்தேர், 96 அடி உயரம், அலங்காரத்துடன், 360 டன் எடை கொண்டது. மொத்தம், 3 நிலைகள் கொண்ட தேரை சுற்றி அடிப்பக்கத்தில், 200க்கும் அதிகமான சிவப்பெருமான் திருவிளையாடல்களை மையப்படுத்திய அழகிய மரச்சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.
ஆரூரா… தியாகேசா.. என்று லட்சக்கணக்கான பக்தர்கள் விண்ணதிர கோஷமிட, மண்ணதிர ஆழித்தேர் பிரம்மாண்டமாய், நான்கு வீதிகளில் ஆடி அசைந்து வருவதைக் காண கண்கோடி வேண்டும். மேலும் ஆழித்தேரை சீராக இயக்கிட, திருச்சி பெல் நிறுவனம் மூலம் இரும்பு அச்சு மற்றும், 4 இரும்பு சக்கரங்களுடன் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக காலை, 5 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர் தேர்கள் வடம் பிடிக்கப்பட்டு தேரோட்டம் தொடங்கியது குறிப்பிடத்தக்கது..
1000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடைப்பெற்ற தேர்த்திருவிழா, 1927ஆம் ஆண்டு ஆழித்தேரோட்டத்தின்போது தேர் முற்றிலும் எரிந்துவிட்டது. கமல வசந்த வீதிவிடங்கப் பெருமானை (தியாகேசர்) முத்துக் கொத்தனார் என்பவர் காப்பாற்றினார்.
நின்றுபோன தேர்த் திருவிழா, பிறகு 1930ஆம் ஆண்டு புதிய தேர் உருவாக்கப்பட்டு மீண்டும் நடைபெற்றது. தேரோட்டம் , 1948ஆம் ஆண்டு வரை நடைபெற்றது. அதன்பிறகு ஏதேதோ காரணங்களால் நின்று போனது.
கடந்த, 1970ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி மற்றும் வடபாதிமங்கலம் தியாகராஜ முதலியார் முயற்சியால், மீண்டும் ஆழித் தேரோட்டம் நடைபெற துவங்கி, தற்போது வரை தொடர்ந்து சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகிறது.
வீதிவிடங்கனின். பிரம்மாண்டமான ஆழித்தேரின் உயரம் 96 அடி. இது வீதிவிடங்கனின், 96 தத்துவங்களைக் கடந்தவன் என்று குறிக்கிறது. தேரின் மேல் பகுதி கமலவடிவமாக காட்சி அளிக்கிறது.திருவாரூர் ஆழித் தேரோட்டத்தையொட்டி, திருவாரூர் எஸ்பி விஜயகுமார் தலைமையில், திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த, 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 120 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்பது குறிபிடத்தக்கது.