குப்பையில்லா நகராட்சி எனும் நட்சத்திர அந்தஸ்து குறித்த மக்களின் கருத்துக்கள் கேட்பதற்கான நேரம் இதுவல்ல; விளம்பரத்தைத் திரும்பப் பெற வேண்டும் – நகராட்சி ஆணையருக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை!



குப்பையில்லா நகராட்சி எனும் நட்சத்திர அந்தஸ்து குறித்த மக்களின் கருத்துக்கள் கேட்பதற்கான நேரம் இதுவல்ல; விளம்பரத்தைத் திரும்பப் பெற மயிலாடுதுறை நகராட்சி ஆணையருக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை அனுப்பியுள்ளார்.
மயிலாடுதுறை நகராட்சி மிகவும் தொன்மையும் பழமையும் பெருமையும் மிக்கதாகும். நகராட்சியின் சிறப்புகள் பல வகை இருந்தாலும் கடந்த சில ஆண்டுகளாக குப்பை மேலாண்மையில் பின்னடைவில் தான் இருந்தோம் என்பது நகரத்தில் வாழ்கின்ற மக்கள்அனுபவித்த வேதனைகளின் வெளிப்படையான கூற்றாக உள்ளது. இந்நிலையில் கடந்த ஓராண்டாக நகராட்சியின் புதிய ஆணையராக பாலு அவர்கள் பொறுப்பேற்ற பிறகு, நகராட்சியின் நிர்வாகத்தை சீரமைத்து பல்வேறு கட்ட வளர்ச்சி முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியது.
அவர் செல்லுகின்ற அதே வேகத்தோடு நடவடிக்கைகள் தொடருமேயானால் திடக்கழிவு மேலாண்மை முதல் வரி வசூல் வரை அனைத்தும் சரி செய்யப்படும் என்னும் நம்பிக்கை அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச் 4 ஆம் தேதி புதிய நகராட்சித் தலைவர், துணைத் தலைவர் 35வது வார்டு பொறுப்பேற்றுக்கொண்ட காரணத்தால், ஆணையர் பாலு அவர்களும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் இணைந்து இந்நகரத்தின் வளர்ச்சிக்கு பாடுபடுவார்கள் என்ற கூடுதல் நம்பிக்கை ஏற்பட்டதுடன்,
நகராட்சியின் முன்னேற்றப் பாதை நோக்கி காண, வழிமேல் விழிவைத்து மயிலாடுதுறை மக்கள் வெகுவாக காத்திருக்கிறார்கள். இந்நிலையில் பத்திரிக்கைகளில் மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் விடுத்த அறிவிப்பு விளம்பரம், குப்பையில்லா நகராட்சிக்கான நட்சத்திர அந்தஸ்து பெறுவதற்கு உள்ள ஆட்சேபனை கருத்துக்களை மக்கள் தெரிவிக்க வேண்டிய விளம்பர அறிக்கையை பார்த்தோம்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களே, மயிலாடுதுறையில் மக்கள் அளிக்கும் சான்றிதழே மிகப்பெரிய விருது எனக்கு என்றுபலகூட்டங்களில் எடுத்துரைப்பதை கருத்தில் கொண்டு, நகர மக்களின் கடந்தகால கோரிக்கைகளையும் பட்ட கஷ்டங்களையும் குறிப்பிட்ட மாதங்களுக்குள் நிறைவேற்றிஅதன் பிறகு இதுபோன்ற விருதுகளை பெறுவதற்கான முயற்சியை நம் மயிலாடுதுறை நகராட்சி பெறுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
அதுவரை இதுபோன்ற எதிர்வினை தரக்கூடிய விளம்பரங்கள் தவிர்க்கப்பட வேண்டும். இந்நிலையை நன்கு உணர்ந்த இன்றைய நகராட்சி நிர்வாகம் விரைந்து குறைகளை நிவர்த்தி செய்து விருதுகளைப் பெற வேண்டும். அதுவே உண்மையான விருதாக அமையும். அது அரசு கொடுக்கும் நட்சத்திர விருதை விட மிக உச்ச விருதாக அமையும் என்பது உறுதி அந்த நாளை நோக்கி மயிலாடுதுறை மக்கள் காத்திருக்கிறோம். இவ்வாறு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் மயிலாடுதுறை நகராட்சி ஆணையருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
Advertisement