மயிலாடுதுறையில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் கைது!



கும்பகோணம் அழகப்பா தெருவை சேர்ந்தவர் காமராஜ். இவருடைய மகன் சண்முகம் (வயது 29). இவர் கடந்த மாதம் 29-ந்தேதி மயிலாடுதுறையில் உள்ள உறவினர் வீட்டுக்கு ரயிலில் சென்றார். மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் யிலைவிட்டு இறங்கிய சண்முகம் ரயில் நிலையத்தின் வெளிப்புறப் பகுதியில் உள்ள கழிவறைக்கு சென்றபோது, அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை மர்மநபர் ஒருவர் பறித்துக்கொண்டு தப்பி சென்று விட்டார். இதுகுறித்து சண்முகம் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதைப்போல கடந்த 2-ந் தேதி கும்பகோணம் மாதுளம்பேட்டையை சேர்ந்த பாலாஜி மனைவி புஷ்பவள்ளி (33) என்பவர் மயிலாடுதுறை பஸ் நிலையம் அருகில் நடந்து சென்றார். அப்போது அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்று விட்டார்.
இது குறித்து புஷ்பவள்ளி மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த 2 சங்கிலி பறிப்பு தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் மயிலாடுதுறை ரயில்வே காலனி பகுதியில் வசித்து வரும் மகாலிங்கம் மகன் பிரபாகரன் (30) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மேற்கண்ட 2 வழிப்பறிகளிலும் பிரபாகரன் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் அவரிடமிருந்து 3 பவுன் சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மயிலாடுதுறை போலீசார் பிரபாகரனை கைது செய்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.