முழு உலகம் மிகுந்த துயரத்தில்: போப் பிரான்சிஸின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்!

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரும் உலகமெங்கும் கோடிக்கணக்கான விசுவாசிகளின் ஆன்மீக தலைவருமான போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

கத்தோலிக்க திருச்சபை மத தலைவர் போப் பிரான்சிஸ் (வயது 88) நிமோனியா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த மார்ச் 23ம் தேதி அவர் வீடு திரும்பியபோதும், நிலைமை மீண்டும் மோசமடைந்தது.

அவரின் மறைவு உலகெங்கும் உள்ள கத்தோலிக்க விசுவாசிகள் மத்தியில் பெரும் சோகத்தையும் இரங்கலையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, நெதர்லாந்து பிரதமர் டிக் ஸ்கூஃப், ராகுல் காந்தி உள்ளிட்ட பல உலக அரசியல் தலைவர்கள் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது எக்ஸ் (முன்னதாக ட்விட்டர்) தளத்தில் பகிர்ந்துள்ள பதிவில்,“கருணையும் முற்போக்கான விழுமியங்களும் நிறைந்த வழிகாட்டுதலால் கத்தோலிக்க திருச்சபையில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் போப் பிரான்சிஸ்.

அவரது மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்களுக்கும் அவரது நற்பணிகளால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் என் இரங்கல்கள்.”

என்று தெரிவித்துள்ளார்.

அவர் இரக்கமுள்ளவராகவும், சீர்திருத்தத்திற்கான வலிமையான குரலாகவும் இருந்தார். அவரின் பணிவு, தைரியம் மற்றும் கருணை அனைவரையும் நெகிழ வைத்தவை. ஏழைகளுக்கான அவரது அர்ப்பணிப்பு, ஒதுக்கப்பட்டவர்களை அரவணைத்தல், நீதி, அமைதி மற்றும் மதங்களுக்கு இடையேயான உரையாடலை வலியுறுத்திய அவரது வாதங்கள், கத்தோலிக்க உலகத்தைத் தாண்டி உலகளாவிய மரியாதையை அவருக்கு பெற்றுத் தந்தன.”

இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.