மயிலாடுதுறை | மார்ச் 30, 2026
2026 சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் அறிவிப்பைத் தொடர்ந்து, மயிலாடுதுறை அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீர்காழி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வும், மயிலாடுதுறை மாவட்ட கழக அவைத்தலைவருமான பி.வி.பாரதி, தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கழக பொதுச்செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
2026 சட்டமன்றத் தேர்தலில் சீர்காழி தொகுதி வேட்பாளர் தேர்வில் தனக்கு மிகுந்த மனவருத்தம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் கழகத்திற்காக உழைப்பவர்களைப் பழிவாங்கும் நடவடிக்கையில் திரு. ஓ.எஸ்.மணியன் மற்றும் திரு. எஸ்.பவுன்ராஜ் ஆகியோர் ஈடுபட்டு வருவதாகக் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
இத்தகைய சூழலில் அவர்களோடு இணைந்து பணியாற்ற முடியாது என்பதால், தனது மாவட்ட அவைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்துள்ளார். இருப்பினும், கழகத்திற்கும் அதன் தலைமைக்கும் என்றும் விசுவாசமான தொண்டனாக இருப்பேன் எனத் தெரிவித்துள்ள பி.வி.பாரதியின் இந்த முடிவு, தேர்தல் நேரத்தில் அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

