மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரில் போக்குவரத்து போலீசார் சார்பில் நேற்று திடீர் வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. வழக்கமாக வாகனங்களை மறிக்கும் போது அபராதம் விதிக்கப்படும் என அச்சமடைந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு, அங்கு ஒரு நெகிழ்ச்சியான இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.
சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த தணிக்கையின் போது, தலைக்கவசம் (ஹெல்மட்) அணிந்து சாலை விதிகளை சரியாகப் பின்பற்றி வந்த வாகன ஓட்டிகளை நிறுத்திய காவல்துறையினர், அவர்களுக்கு அபராதம் விதிப்பதற்கு பதிலாக இனிப்புகள் மற்றும் மலர்களை வழங்கி பாராட்டு தெரிவித்தனர். மேலும், ஹெல்மட் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதிக்காமல், வீடுகளுக்கு பாதுகாப்பாக செல்ல வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து அன்போடு அறிவுரை வழங்கினர்.
காவல்துறையினரின் இந்த விநோதமான மற்றும் நெகிழ்ச்சியான அணுகுமுறை அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘போலீசாரைக் கண்டாலே அபராதம் போடுவார்கள் என்று பயந்து ஒதுங்கிய நமக்கு, அவர்களின் இந்த அன்பான செயல் சாலை விதிகளை முறையாக மதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளது’ என வாகன ஓட்டிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எஸ்பி உத்தரவின் பேரில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நடவடிக்கை, சீர்காழி பகுதியில் விபத்துகளைக் குறைக்கவும், காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தவும் பெரிதும் உதவும் என சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


