மயிலாடுதுறையில் களைகட்டிய 2-ஆம் நாள் மயூர நாட்டியாஞ்சலி. ஏராளமான நாட்டிய கலைஞர்கள் பங்கேற்பு.

மயிலாடுதுறை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் மகாசிவராத்திரியை முன்னிட்டு 20-ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி விழா அருள்மிகு மயூரநாதர் ஆலயத்தில் பிப்ரவரி 12 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இரண்டாம் நாள் மயூர நாட்டியஞ்சலி விழாவிற்கு சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை அறங்காவலர் குழு தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். அறங்காவலர் குழு துணை தலைவர் சிவலிங்கம், சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை தலைவர் இசைக்கலைமணி பரணிதரன், அறக்கட்டளை செயலாளர் வாத்திய கலைமணி மாயவரம் விஸ்வநாதன், துணை செயலாளர் அகஸ்டின் விஜய், பொருளாளர் ராமன் மற்றும் அறங்காவலர்கள், அறக்கட்டளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இரண்டாம் நாள் மயூர நாட்டியாஞ்சலி விழாவில் கலை மற்றும் இசைத் துறையில் சிறந்து விளங்கி வரும் கலைர்கள் கங்காதரசங்கரனுக்கு மயூர முழவிசை இளவல் என்ற விருதும், காமேஸ்வரனுக்கு மயூர வேங்குழல் இளவல் என்ற விருதும், அனந்தராமனுக்கு மயூர யாழிசை இளவல் என்ற விருதும் வழங்கி பாராட்டப்பட்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் நாள் மயூர நாட்டியாஞ்சலி விழாவில் மயிலாடுதுறை ஸ்ரீ ஷண்முகா நாட்டியப்பள்ளி குழுவினர், சேலம் தஞ்சாவூர் த்ர்ஷ்யகாவ்ய கூடம் குழுவினர், சென்னை ந்ருத்ய சம்ஸ்ருதி ட்ரஸ்ட் குழுவினர், அமெரிக்கா நடேஷா ஸ்கூல் ஆஃப் பரதநாட்டிய குழுவினர் மற்றும் பெங்களூர் ந்ருத்ய கங்கா ப்ரதர்ஷிகா கலாகேந்த்ரா உள்ளிட்ட குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மயூர நாட்டியாஞ்சலியில் சிவனின் அனைத்து முத்திரைகளையும் உள்ளடக்கிய நாட்டிய நிகழ்வுகள், தஞ்சை நால்வரால் இயற்றப்பட்ட பழமையான நாட்டிய நிகழ்வுகள் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. இதில் ஏராளமான நாட்டியக் கலைஞர்கள், இசைக்கலைஞர்கள், கலை ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

20-ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி விழா பிப்ரவரி 14,15 சனி, ஞாயிறு ஆகிய நாட்களும் மாலை 5:30 மணி முதல் நள்ளிரவு வரை நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, சீனா, லண்டன் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் 500க்கும் மேற்பட்ட நாட்டிய கலைஞர்கள் பங்கேற்று பல்வேறு விதமான நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.
நாட்டியாஞ்சலி விழாவிற்கான ஏற்பாடுகளை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்துள்ளனர்.

Advertisement