மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்கவும், சட்டவிரோத செயல்களை முற்றிலுமாகத் தடுக்கவும் மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த சமூக விரோதிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் பாய்ந்து வருகின்றன.
இந்த நிலையில், மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, செம்பனார்கோவில் மற்றும் பூம்புகார் உள்ளிட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை, திருட்டு, வழிப்பறி மற்றும் கொலை வழக்குகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த நபர்களை காவல்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். இதில், குற்றப் பின்னணி கொண்ட நபர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுத்ததில், இதுவரை மொத்தம் 48 பேர் மீது குண்டர் சட்டம் (Goondas Act) பிரயோகிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
சீர்காழி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த முக்கிய குற்றவாளிகளும் இந்த அதிரடி நடவடிக்கையில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுவோர் மீது எவ்வித தயவுமின்றி கடுமையான நடவடிக்கை தொடரும் என்றும், கஞ்சா மற்றும் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுபவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் மாவட்ட காவல்துறை தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது.


