மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் அதன் சுற்றியுள்ள சீர்காழி, செம்பனார்கோவில், பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் (DPC) தேக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சமீபத்தில் பெய்த திடீர் கனமழை காரணமாக, கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் அடுக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழைநீரில் மிதக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
கொள்முதல் நிலைய ஊழியர்கள் ஒரு நெல் மூட்டைக்கு ₹40 வரை லஞ்சமாகக் கேட்டால் மட்டுமே கொள்முதல் நிலையக் கதவைத் திறந்து நெல்லைப் பெறுகின்றனர் என்றும், பணம் தர மறுக்கும் விவசாயிகளின் நெல் மூட்டைகளைக் கொள்முதல் செய்யாமல் அலட்சியப்படுத்துவதாகவும் விவசாயிகள் வேதனையுடன் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் பல நாட்களாகக் காத்துக் கிடக்கும் நெல்மணிகள் மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கியுள்ளதால், விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளனர்.
இரவு பகலாகப் பாடுபட்டு விளைவித்த நெற்பயிர்கள் கண்ணெதிரே வீணாவதைக் கண்டு மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் கொந்தளிப்பில் ஆழ்ந்துள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் உடனடியாக தலையிட்டு, அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் ஆய்வு மேற்கொண்டு, லஞ்சக் கோரிக்கையில் ஈடுபடும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மழையால் பாதிக்கப்பட்ட நெல் மூட்டைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


