மயிலாடுதுறை கடலில் புதிய எண்ணெய் கிணறுகள் திட்டம்: “தமிழக அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது!” – வேல்முருகன் வலியுறுத்தல்

மயிலாடுதுறை மாவட்ட கடலோரப் பகுதிகளில் புதிய எண்ணெய் கிணறுகளை அமைக்க மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுக்குத் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பூம்புகார், தரங்கம்பாடி மற்றும் சீர்காழி கடலோரப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இத்தகைய திட்டங்களில் தமிழக அரசு வெறும் பார்வையாளராகச் செயல்படக் கூடாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி டெல்டா மண்டலம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மயிலாடுதுறை கடல் பகுதியில் புதிய ஹைட்ரோகார்பன் மற்றும் இயற்கை எரிவாயு கிணறுகளைத் தோண்டுவது இயற்கை சமநிலையை சீர்குலைக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், பூம்புகார் மற்றும் சுற்றுவட்டார மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கும் அபாயம் உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, டெல்டா மாவட்டங்களின் விவசாயத்தையும், கடலோரச் சூழலையும் பாதுகாக்கும் வகையில், மத்திய அரசின் இத்திட்டத்திற்குத் தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுத்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வேல்முருகன் கேட்டுக் கொண்டுள்ளார். உள்ளூர் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, மயிலாடுதுறை கடல்வளத்தைப் பாதுகாக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.