தென்னக ரயில்வேயின் முக்கியமான வழித்தடங்களில் ஒன்றான செங்கோட்டை – மயிலாடுதுறை விரைவு ரயிலில் பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தென் மாவட்டங்களையும், காவிரி கரையில் உள்ள மயிலாடுதுறை, கும்பகோணம் உள்ளிட்ட ஆன்மீக மற்றும் வணிக மையங்களையும் இணைக்கும் இந்த ரயிலில் போதிய அளவு முன்பதிவு பெட்டிகள் (Sleeper Class) இல்லாததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக, மயிலாடுதுறை, குற்றாலம், தஞ்சாவூர் மற்றும் தென்காசி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த முதியோர்கள், பெண் பயணிகள், கல்லூரி மாணவர்கள் மற்றும் மருத்துவ தேவைக்காக விரைபவர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். முன்பதிவு இல்லாத பெட்டிகளில் கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காமல் இருப்பதால், நீண்ட தூரப் பயணத்தை நிம்மதியாக மேற்கொள்ள முடியாத அவலநிலை நீடிக்கிறது.
இதுகுறித்து தென்னக ரயில்வே நிர்வாகம் உடனடியாக கவனம் செலுத்தி, செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் கூடுதல் முன்பதிவு பெட்டிகளை (Sleeper and AC coaches) இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட ரயில் பயணிகள் நலச்சங்கம் மற்றும் உள்ளூர் வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


