சமீப காலங்களில், தெரு நாய்கள் கடித்து வெள்ளாடு, செம்மறி ஆடு, பசு, எருமை, கோழி போன்ற கால்நடைகள் / வளர்ப்புப் பிராணிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. இதனையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்பேரில், இச்சம்பவம் குறித்த விவரங்கள் மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து பெறப்பட்டு கவனமாக ஆய்வு செய்யப்பட்டன.
அதனடிப்படையில், மாநிலத்திலுள்ள கிராமப் பஞ்சாயத்து, பேரூராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் விவசாய / கால்நடை விவசாயிகளால் வளர்க்கப்படும் மேற்படி கால்நடைகள் / வளர்ப்புப் பிராணிகள் நாய்கள் கடித்து உயிரிழக்கும் நிகழ்வுகளில் உரிய இழப்பீடு வழங்க பேரிடர் மேலாண்மை நிதியின்கீழ் வரையறுக்கப்பட்டுள்ள விதிமுறைகளின் அடிப்படையில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின்கீழ் பின்வருமாறு இழப்பீடு வழங்கிட முதலமைச்சர் அவர்கள் இன்று காலை ஆணையிட்டிருந்ததாகவும், அதன்படி, நாய் கடித்து உயிரிழக்கும் மாடு ஒன்றுக்கு 37 ஆயிரத்து 500 ரூபாயும், வெள்ளாடு / செம்மறி ஆடு ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபாயும், கோழி ஒன்றுக்கு 100 ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும் என்றும், இதுவரை உயிரிழந்த 1,149 பிராணிகளுக்கு 42 இலட்சத்து 2 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என்றும் இன்று (19-3-2025) காலை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. இ. பெரியசாமி அவர்கள் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இதுகுறித்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், தற்போது முதலமைச்சர் அவர்கள் செம்மறி ஆடு, வெள்ளாடு ஆகியவற்றின் உயிரிழப்புக்கு வழங்க அறிவிக்கப்பட்ட 4 ஆயிரம் ரூபாயினை 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியும், கோழி உயிரிழப்புக்கு அறிவிக்கப்பட்ட 100 ரூபாயினை, 200 ரூபாயாக உயர்த்தியும் வழங்கிட அறிவுறுத்தியுள்ளார் என்றும், இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும் மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மீண்டும் அறிவித்துள்ளார்.