மயிலாடுதுறை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் மகாசிவராத்திரியை முன்னிட்டு பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பாருக்கு உணர்த்தும் உன்னத நோக்கத்தோடு ஆண்டுதோறும் மயூர நாட்டியாஞ்சலி விழா நடைபெற்று வருகிறது. அதே போல இந்த ஆண்டும் மகா சிவராத்திரியை முன்னிட்டு திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமாகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாசாரிய சுவாமிகளின் நல்லாசிகளோடு சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை நடத்தும் 20-ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி விழா அருள்மிகு மயூரநாதர் ஆலயத்தில் சிறப்பாக தொடங்கியது.
மங்கள இசையுடன் தொடங்கிய மயூர நாட்டியஞ்சலி துவக்க விழாவிற்கு சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை அறங்காவலர் குழு தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். அறங்காவலர் குழு துணை தலைவர் சிவலிங்கம், ஆலோசனைக்குழு தலைவர் பத்மஸ்ரீ லீலா சாம்சன், அறங்காவலர்கள் முத்துக்குமார், மோகன்ராஜ் மதியழகன், மருத்துவர். இரத்தின அருண்குமார், அசோக், பிச்சைக்கண்ணன், மருத்துவர்.நீலகிருஷ்ணன், செந்தில்வேல், மருத்துவர். சண்முகம், குமரன், செந்தில்குமார், பாண்டுரங்கன், சங்கரி பரசுராமன், சாந்தகுமார், அறக்கட்டளை பொருளாளர் ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கலைமாமணி, சங்கீதகலாநிதி மூத்த மிருதங்க கலைஞர் முனைவர் திருவாரூர் பக்தவச்சலம்,
தமிழக இயல் இசை நாடக மன்ற உறுப்பினர் மற்றும் செயலாளர் விஜயா தாயன்பன், தமிழ்நாடு பேக்கரி பேரடைஸ் தலைவர் பாண்டுரங்கன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை தலைவர் இசைக்கலைமணி பரணிதரன் வரவேற்புரையாற்றினார். அறக்கட்டளை செயலாளர் வாத்திய கலைமணி மாயவரம் விஸ்வநாதன் 20-ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி விழாவில் பங்கேற்கும் கலைஞர்கள் மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் குறித்து விளக்கினார்.
கலைத்துறையில் சிறந்து விளங்கும் இசை கலைஞர்களுக்கும், நாட்டிய கலைஞர்களுக்கும் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டு கலை மற்றும் இசைத் துறையில் சிறந்து விளங்கி வரும் முனைவர் திருவாரூர் பக்தவச்சலம் அவர்களுக்கு லயஞான சாகரம் விருதும், நாட்டியகுரு மாயவரம் மகாலஷ்மி சிவகுமாருக்கு இளம் மயூர நட்டு வாங்க நன்மணி விருதும், நாதஸ்வர கலைஞர் கலைமுதுமணி ஆர்.சுகுமாருக்கு மயூர நாதஸ்வர சுகஸ்வர இளவல் விருதும், நாதஸ்வர கலைஞர்கள் வி.எம்.ரமேஷ், எஸ்.அருண்குமார், ஆர்.மணிகண்டன் ஆகியோருக்கு மயூர நாதஸ்வர இளவல் விருதும், தவலிசை கலைஞர்கள் ரெட்டியூர் அ.செல்வம், சீர்காழி க.முருகேசன் ஆகியோருக்கு மயூர லயஞான தவிலிசை நன்மணி விருதும் வழங்கி பாராட்டப்பட்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற முதல் நாள் மயூர நாட்டியாஞ்சலி விழாவில் சென்னை காவியாலயா குழுவினர், பெய்ஜிங் சீனா நாட்டிலிருந்து வந்திருந்த சங்கீதம் இந்தியா ஆர்ட்ஸ் குழுவினர், சென்னை பத்மஸ்ரீ கலைமாமணி லீலா சாம்சன் குழுவினர், மயிலாடுதுறை மயிலை சப்தஸ்வரங்கள் நுண்கலை பயிற்சியக கலைஞர்கள் உள்ளிட்ட குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் ஏராளமான நாட்டியக் கலைஞர்கள், இசைக்கலைஞர்கள், கலை ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர். சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை துணை செயலாளர் அகஸ்டின் விஜய் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஒருங்கிணைப்பு குழு செயலாளர் அரவிந்த் நன்றி கூறினார்.
பிப்ரவரி 12-ஆம் தேதி வியாழன் கிழமை தொடங்கிய மயூர நாட்டியாஞ்சலி விழா வெள்ளி,சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் மாலை 5:30 மணி முதல் நள்ளிரவு வரை நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, சீனா, லண்டன் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் 500க்கும் மேற்பட்ட நாட்டிய கலைஞர்கள் பங்கேற்று பல்வேறு விதமான நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.
நாட்டியாஞ்சலி விழாவிற்கான ஏற்பாடுகளை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்துள்ளனர்.





