ரூ. 515 கோடி முதலீட்டில் 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில், கோத்ரெஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் உற்பத்தித் தொழிற்சாலை – தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (10.3.2025) செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், குன்னப்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 515 கோடி ரூபாய் முதலீட்டில் 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், கோத்ரெஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி ஆலையை தொடங்கி வைத்து, பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
தமிழ்நாடு. இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாகவும், பல்வேறு துறைகளில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாகவும் விளங்கி வருகிறது. முதலீடுகளை ஈர்ப்பதிலும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை, குறிப்பாக பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுவதாக, 2024-25 ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், 2030-க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வளர்ச்சி பெறுவதற்கும், தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டுவருகிறது.

கோத்ரெஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனம்

கோத்ரெஜ் பல வருட பாரம்பரியம் கொண்ட, பல லட்சம் நுகர்வோர் ஆதரவைப் பெற்ற ஒரு குழுமம் ஆகும். கோத்ரெஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனம், கோத்ரெஜ் குழுமத்தின் ஒரு அங்கமாகும். நுகர்வோர் தயாரிப்புகளில் இது ஒரு வளர்ந்து வரும் சந்தை நிறுவனமாவும் திகழ்கிறது.

இந்நிறுவனம், இந்தியாவில் பல்வேறு இடங்களில் தனது உற்பத்தி அலகுகளை நிறுவியுள்ளது. தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் ஒரு உற்பத்தித் ஆலையை நிறுவியுள்ளது.

மேம்பட்ட உற்பத்தியில் ஒரு சிறப்புமிக்க நிறுவனம் என்பதை இலக்காகக்கொண்டு சோப்புகள், சரும பராமரிப்புப் பொருட்கள் மற்றும் தலைமுடி பராமரிப்பு சாதனங்கள் போன்ற பொருட்களை உற்பத்தி செய்திட ஒரு புதிய அதிநவீன உற்பத்தி ஆலையை செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், குன்னப்பட்டு ஊராட்சியில் 515 கோடி ருபாய் முதலீட்டில் இந்நிறுவனம் நிறுவியுள்ளது. இந்த உற்பத்தி ஆலையில் கோத்ரெஜ் நிறுவனத்தின் அனைத்து வகையான சோப்புகள், சரும பராமரிப்புப் பொருட்கள், தலைமுடி பராமரிப்பு சாதனங்கள் போன்ற பொருட்கள் உற்பத்தி செய்யப்படும்.
இந்த திட்டத்தில், 50 சதவிகிதம் அளவிற்கு பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்க உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த உற்பத்தி ஆலை புத்தாக்கம் மற்றும் நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் நிறுவப்படவுள்ளதால் இது “Light House Factory” என்று குறிப்பிடப்படுகிறது.
இத்திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. அடிக்கல் நாட்டப்பட்டு, 13 மாதங்களிலேயே ஆலை நிறுவப்பட்டு, அதன் உற்பத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்றையதினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் . தா.மோ. அன்பரசன், மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் .ஜி. செல்வம். சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி. முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர்  வி. அருண் ராய், இ.ஆ.ப., தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்

மற்றும் தலைமைச் செயல் அலுவலர் மருத்துவர் தாரேஸ் அகமது, இ.ஆ.ப., செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ். அருண்ராஜ், இ.ஆ.ப., கோத்ரெஜ் குழுமத்தின் தலைவர் நாதிர் கோத்ரெஜ், கோத்ரெஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர்  சுதிர் சீதாபதி, நிறுவன உயர் அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.