தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (25.3.2025) சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் ‘WTT ஸ்டார் கன்டென்டர் 2025’ டேபிள் டென்னிஸ் போட்டியின் வெற்றிக் கோப்பையை அறிமுகப்படுத்தி, பயிற்சி ஆட்டத்தை பார்வையிட்டார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னை பார்முலா 4 கார் பந்தயம், சென்னை ஓபன் (WTA) சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் 2022 போட்டி, சர்வதேச ஸ்குவாஷ் போட்டி 2023, “ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி சென்னை 2023”, சர்வதேச அளவிலான உலக அலைசறுக்கு (சர்ஃபிங் லீக்) போட்டிகள், தமிழ்நாடு அரசு மற்றும் ஹெச்.சி.எல் (HCL) நிறுவனம் இணைந்து மாபெரும் சைக்ளோத்தான் போட்டி, சென்னை செஸ் கிராண்ட் மாஸ்டர்-2023. கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி, ஏடிபி சேலஞ்சர் சர்வதேச ஆண்கள் டென்னிஸ் போட்டி, முதலமைச்சர் கோப்பை போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை நடத்தி தமிழ்நாட்டினை இந்தியாவின் விளையாட்டு தலைநகராக உருவாக்கி வருகின்றார்.
தமிழ்நாட்டிற்கு உலக விளையாட்டரங்கில் மேலும் முக்கியத்துவம் கிடைத்திடும் வகையில் சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் ‘WTT ஸ்டார் கன்டென்டர் 2025’ என்ற டேபிள் டென்னிஸ் போட்டியின் வெற்றிக் கோப்பையை மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அறிமுகப்படுத்தி, பயிற்சி ஆட்டத்தை பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
வேர்ல்டு டேபிள் டென்னிஸ் ஸ்டார் கன்டென்டர் என்ற டேபிள் டென்னிஸ் போட்டியை இன்றைக்கு தொடங்கி வைத்துள்ளோம். இந்த போட்டி இன்றைக்கு தொடங்கி அடுத்த ஒரு வாரத்திற்கு வருகின்ற 30 ஆம் தேதி வரை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.
இந்தப் போட்டியை நடத்துவதற்காக நம்முடைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு மூன்று கோடியே 20 லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கி உள்ளது. இந்த போட்டியில் 25 நாடுகளைச் சேர்ந்த உலகின் 158 முன்னணி டேபிள் டென்னிஸ் வீரர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள். குறிப்பாக இந்தியாவைச் சேர்ந்த 82 வீரர்கள், நம்முடைய தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு.சரத் கமல் அவர்கள். அதேபோல் இந்தியாவின் புகழ்பெற்ற டேபிள் டென்னிஸ் வீராங்கனை தியா சிட்டாலே (DIYA CHITALE) அவர்களும் இந்த போட்டியில் பங்கேற்கின்றார்கள். தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 18 வீரர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்கின்றார்கள். இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு செய்துள்ளது. இந்த போட்டியில் வெல்வதற்கு போட்டியில் பங்கேற்றுள்ள அனைத்து வீரர்களுக்கும் நம்முடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றோம் என்று மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, இ.ஆ.ப., ஸ்டூபா விளையாட்டு பகுப்பாய்வு நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் தீபக் மாலிக், அல்டிமேட் டேபிள் டென்னிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் இகான்ஷ் குப்தா, பத்மஸ்ரீ மற்றும் கேல் ரத்னா விருது பெற்ற இந்திய டேபிள் டென்னிஸ் நட்சத்திர வீரரான திரு. சரத் கமல் ஆகியோர் உள்பட சர்வதேச டேபிள் டென்னிஸ் வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.