2023-ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதுகளை நக்கீரன் இரா.கோபால் மற்றும் சுகிதா சாரங்கராஜ் ஆகிய இருவருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.

 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (6.3.2025) தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் சிறந்த இதழியலாளருக்கான 2023-ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதுகளை நக்கீரன் இரா.கோபால் அவர்களுக்கும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டினை முன்னிட்டு பெண்மையைப் போற்றும் வகையில் சிறப்பினமாக  சுகிதா சாரங்கராஜ் அவர்களுக்கும் வழங்கி சிறப்பித்தார்.
இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றி வரும் சிறந்த இதழியலாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் ‘கலைஞர் எழுதுகோல் விருது’ மற்றும் ரூ.5 இலட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்று 2021-22ஆம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் வகையில், கடந்த 2021-ஆம் ஆண்டிற்கான ‘கலைஞர் எழுதுகோல் விருது’ மூத்த பத்திரிகையாளர்  ஐ.சண்முகநாதன் அவர்களுக்கும், 2022-ஆம் ஆண்டிற்கான ‘கலைஞர் எழுதுகோல் விருது’ மூத்த பத்திரிகையாளர்  வி.என்.சாமி அவர்களுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் அவர்களால் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
அந்த வகையில் 2023-ஆம் ஆண்டிற்கான ‘கலைஞர் எழுதுகோல் விருது’, நக்கீரன் எனும் பெயரில் புலனாய்வு இதழினைத் தொடங்கி பல ஆண்டுகளாகப் பல்வேறு பாராட்டுகளைப் பெற்று வெற்றிகரமாக இதழினை நடத்திவரும் நக்கீரன் இரா. கோபால் அவர்களுக்கு வழங்கிடவும்:
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பெண்மையைப் போற்றும் வகையில் சிறப்பினமாகப், பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களில் 18 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி நிறைந்த அனுபவம் பெற்றுள்ள  சுகிதா சாரங்கராஜ் அவர்களுக்கு

வழங்கிடவும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் உத்தரவிடப்பட்டு, நக்கீரன்  இரா. கோபால் மற்றும்  சுகிதா சாரங்கராஜ் ஆகியோருக்கு இன்றையதினம் கலைஞர் எழுதுகோல் விருதுகளையும், தலா 5 இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் கூடிய பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர்  வே. ராஜாராமன், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு. இரா. வைத்திநாதன் இ.ஆ.ப., ஆகியோர் கலந்து கொண்டனர்.