சென்னையில் நடைபெற்ற மாநில வுஷு போட்டியில் மயிலாடுதுறை மாவட்ட மாணவர்கள் சாதனை

23-வது ஜூனியர் மற்றும் சீனியர் தமிழ்நாடு மாநில வுஷு (Wushu) போட்டி சென்னை விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் உள்விளையாட்டு அரங்கில் ஜூலை 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டத்தின் சார்பில் துர்கா, ஆஷிகா, அபிஷா, கவியரசி, தினேஷ், சரவணன் மற்றும் சாம் டேவிட் ஆகிய 7 மாணவ, மாணவிகள் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதில் தரங்கம்பாடி புனித தெரசா மேல்நிலைப்பள்ளியின் 12-ஆம் வகுப்பு மாணவி துர்கா, மாணவர் சரவணன் மற்றும் மாணவர் தினேஷ் ஆகியோர் தலா ஒரு வெண்கலப் பதக்கம் வென்று மொத்தம் மூன்று வெண்கலப் பதக்கங்களை மயிலாடுதுறை மாவட்டத்திற்கு பெற்றுத் தந்து பெருமை சேர்த்தனர்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், அவர்களுக்கு பயிற்சி அளித்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்த மயிலாடுதுறை மாவட்ட வுஷு சங்கத்தின் மாவட்டச் செயலாளரும், மாவட்ட அணியின் பயிற்சியாளருமான கதிரவன் அவர்களையும், மாவட்ட வுஷு சங்கத்தின் தலைவர் சுதாகர், துணைத் தலைவர் செழியன், இணைச் செயலாளர் சுரேஷ்குமார், பொருளாளர் ஜெயசித்ரா மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர். மாணவர்களின் இந்த சாதனை மாவட்ட விளையாட்டு வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.