தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் தாட்கோ திட்டத்துறைகளின் சார்பில் 159 பயனாளிகளுக்கு ரூ.1.25 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (6.3.2025) திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் தாட்கோ திட்டத்துறைகளின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு 159 பயனாளிகளுக்கு ரூ.1.25 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள், திருவாரூர் மாவட்டம் திருவாரூர் நகராட்சி எஸ்.எஸ். நகரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளியை திருமணம் செய்துகொள்ளும் நல்ல நிலையில் உள்ள நபர்களுக்கு திருமண உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் 5 தம்பதிகளுக்கு இன்றைய தினம் தலா 8 கிராம் தங்க நாணயங்களை வழங்கினார். (இத்திட்டத்தின் கீழ் 4 தம்பதிகளுக்கு தலா ரூ.50,000 மும் 1 தம்பதிக்கு ரூ.25,000/- என திருமண உதவித்தொகை மின்ணனு பரிவர்த்தனை மூலம் சம்மந்தப்பட்ட பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது)

மேலும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ரூ.1,16,000/-மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலியையும், 36 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,10,800/- மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட முன்று சக்கர ஸ்கூட்டர்களையும், 20 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 3,285/- மதிப்பிலான காதொலி கருவிகளையும், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 16,199/-மதிப்பிலான மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு செயலிகளுடன் (ஆப்) கூடிய கைப்பேசிகளையும் மொத்தம் 72 பயனாளிகளுக்கு ரூ.43,31,090/-மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து திருவாரூர் நகராட்சி ஓடம்போக்கி ஆற்றின் குறுக்கே நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மூலம் 4.06 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 36 மீட்டர் நீளமும், 6 மீட்டர் அகலமும் கொண்ட உயர்மட்ட பாலம் கட்டும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர் நீடாமங்கலம் வட்டம் ஊர்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விஸ்வநாதபுரம் மற்றும் கொரடாச்சேரி கிராமங்களில் வசிக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு தாட்கோ திட்டத்தின் கீழ், நபருக்கு 2 கறவைமாடுகள் வீதம் 87 பயனாளிகளுக்கு ரூ.43.50 இலட்சம் மானிய உதவித்தொகை மற்றும், ரூ.39.15 இலட்சம் வங்கி கடனுதவிகளுடன் கறவை மாடுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில் மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா, சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன், தாட்கோ தலைவர் திரு.உ.மதிவாணன், மாவட்ட ஆட்சித்தலைவர் வ.மோகனசந்திரன், இ.ஆ.ப., உள்பட அரசு அலுவலர்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.