சென்னை தலைமைச் செயலகத்தில், 96வது தமிழ்நாடு கடல்சார் வாரியக் கூட்டம், மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

சென்னை, தலைமைச் செயலகத்தில், நாமக்கல் கவிஞர் மாளிகையில் 5ஆம் தளத்தில் உள்ள பொதுப்பணித்துறை கூட்டரங்கில் இன்று (26.3.2025) தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் 96வது வாரியக் கூட்டம் மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் 3 பெரிய துறைமுகங்களும், அறிவிக்கப்பட்ட 17 சிறு துறைமுகங்களும் உள்ளன. பெரிய துறைமுகங்களான சென்னை, எண்ணூர் மற்றும் தூத்துக்குடி ஆகியவை ஒன்றிய அரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ளன.

கடலூர், நாகப்பட்டிணம், பாம்பன், இராமேஸ்வரம், கன்னியாகுமரி, குளச்சல் ஆகிய 6 தமிழ்நாடு அரசின் சிறு துறைமுங்களாக உள்ளன. மேலும், தனியார்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு என 11 சிறு துறைமுகங்களை பயன்படுத்தி வருகின்றனர். அனைத்து சிறுதுறைமுகங்களும் மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் 14 உறுப்பினர்கள் கொண்ட வாரியத்தின் கீழ் செயல்படுகிறது.
இன்று நடைபெற்ற வாரியக் கூட்டத்தின்கீழ், இந்த ஆண்டின் செயல்பாடுகள், அடுத்த ஆண்டின் திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு, வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

அமைச்சர் அவர்கள், வாரியக் கூட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார். மாண்புமிகு அமைச்சர் அவர்களின் உரையில், ஒன்றிய அரசுக்கு தேவையான விவரங்களை காலதாமதம் இல்லாமல் அனுப்பி, ஒன்றிய அரசு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும், புதியதாக பதவியேற்றுள்ள துணைத் தலைவர் திரு.வெங்கடேசன் இ.ஆ.ப., அவர்கள் தனிக் கவனம் செலுத்தி அனைத்து திட்டங்களையும் விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
சிறு துறைமுகங்களை அனைத்து வகையிலும் வளர்ச்சிபெற போதிய திட்டங்களை உருவாக்க வேண்டும் என்றும், அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்பு நல்குமாறும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டார். அதன்பின், ஒவ்வொரு உறுப்பினர்களும் அவர்களுடைய கருத்துகளை தெரிவித்தனர்.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை அரசுச் செயலாளர் இரா.செல்வராஜ் இ.ஆ.ப., கால்நடை, மீன்வளத்துறை அரசுச் செயலாளர் என்.சுப்பையன் இ.ஆ.ப., பொதுப்பணித்துறை அரசுச் செயலாளர் ஜெ.ஜெயகாந்தன் இ.ஆ.ப., தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் துணை தலைவர் / தலைமை நிர்வாக இயக்குநர் T.N.வெங்கடேசன் இ.ஆ.ப., நிதித்துறை துணைச் செயலாளர் பிரதிக் தயாள், இ.ஆ.ப., கடல்சார் மாநில துணைத் தலைவர் எம்.அன்பரசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்குப் பெற்றனர்.