கடலூர் அருகே அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மோதி விபத்து: 18 பேர் காயம்

கடலூர் மாவட்டம் புதுசத்திரம் அருகே இன்று காலை அரசு விரைவுப் பேருந்தும் தனியார் பேருந்தும் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 18 பேர் படுகாயமடைந்தனர்.

இன்று காலை சுமார் 6 மணியளவில், கடலூரில் இருந்து 20 பயணிகளுடன் தனியார் பேருந்து குள்ளஞ்சாவடி நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆலப்பாக்கம் மேம்பாலம் பகுதியில் அந்த பேருந்து சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த சென்னையிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் அரசு விரைவுப் பேருந்து, தனியார் பேருந்தின் பின்புறம் மோதி விபத்து ஏற்பட்டது.

விபத்து காரணமாக அரசுப் பேருந்து சாலை ஓரத்தில் உள்ள வயலில் இறங்கியது. இரு பேருந்துகளில் பயணம் செய்திருந்த 18 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

16 பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் மற்றும் 2 பேர் சிதம்பரத்தில் உள்ள மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து புதுசத்திரம் போலீஸார் வழக்குப்பதிந்து மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.