மார்ச் 29 சனிப்பெயர்ச்சி இல்லை – திருநள்ளார் சனீஸ்வரன் கோயில் நிர்வாகம் அறிவிப்பு

வருகின்ற மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெற போவதாக ஜோதிடர்கள் ஒவ்வொரு ராசிக்குமான பலனை கணித்து வரும் நிலையில் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாரில் உள்ள பிரபலமான சனீஸ்வரன் கோயில் நிர்வாகம் திடீரென மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி இல்லை என அறிவித்துள்ளது.

ஜோதிடத்தில் சனிப்பெயர்ச்சி ஏற்பட்டால் அனைத்து ராசியினருக்கும் சாதகமும் பாதகமும் ஏற்படும் என்பதால் இத்தகைய நிகழ்வு ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் இடையே மிகப் பெரிய அச்சத்தை ஏற்படுத்தும். இப்படியான நிலையில் நிகழும் மங்களகரமான குரோதி வருடம் பங்குனி மாதம் 15 ஆம் நாளான 2025 மார்ச் 29ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

அன்றைய நாளில் இரவு 9:44 மணிக்கு திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சனி பகவான் தனது சொந்த வீடான கும்ப ராசியிலிருந்து பூரட்டாதி மூன்றாம் பாதத்தில் இருந்து குருவின் வீடான மீன ராசியின் பூரட்டாதி 4ஆம் பாதத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். இதனால் 12 ராசிகளுக்கும் ஏற்படக்கூடிய தாக்கங்கள், நற்பலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள் உள்ளிட்டவை குறித்து கடந்த சில நாட்களாகவே பல்வேறு விதமான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் மார்ச் 29ஆம் தேதி சனி பெயர்ச்சி கிடையாது என காரைக்கால் மாவட்டம் திருநள்ளாரில் உள்ள பிரபலமான சனீஸ்வரன் கோயில் நிர்வாகம் திடீரென அறிவித்துள்ளது. மேலும் வாக்கிய பஞ்சாங்க முறைப்படி 2026 ஆம் ஆண்டில் தான் சனிப்பெயர்ச்சி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.