பூம்புகார் கடற்பகுதியில் ஹைட்ரோகார்பன் கிணறுகள்? மயிலாடுதுறை மீனவர்கள் கடும் அதிர்ச்சி – வாழ்வாதாரத்திற்கு பேராபத்து என எச்சரிக்கை!

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் கடற்பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்காக கிணறுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள், அப்பகுதி மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. காவிரி படுகை மண்டலம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், கடலோரப் பகுதிகளில் இத்தகைய திட்டங்களைச் செயல்படுத்த முற்படுவது கடலோரச் சூழலையும் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் முற்றிலும் முடக்கும் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க பூம்புகார், தரங்கம்பாடி, வானகிரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள சீர்காழி கடலோர கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் தினமும் கடலுக்குச் சென்று மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர். பூம்புகார் ஆழ்கடலில் ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் தோண்டப்பட்டால், கடல்வளம் கடுமையாகப் பாதிக்கப்படும். மேலும், ரசாயனக் கழிவுகள் கடலில் கலப்பதால் மீன்வளம் அழிவதோடு, கடல்சார் சூழல் மண்டலமும் சீர்குலையும் அபாயம் எழுந்துள்ளது.

இதுகுறித்து பூம்புகார் பகுதி மீனவ கிராமப் பஞ்சாயத்தார்கள் மற்றும் பல்வேறு மீனவ அமைப்பினர் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். ‘ஏற்கனவே பருவநிலை மாற்றம், கடல் சீற்றம் மற்றும் டீசல் விலை உயர்வால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் எங்களுக்கு, இந்த ஹைட்ரோகார்பன் திட்டம் மீளாத் துயரத்தைத் தரும். தமிழ்நாடு அரசும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாகத் தலையிட்டு இத்திட்டத்தை முழுமையாகக் கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்; தவறினால் மயிலாடுதுறை மாவட்டம் தழுவிய அளவில் கடலுக்குச் செல்லாமல் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம்’ என மீனவப் பிரதிநிதிகள் எச்சரித்துள்ளனர்.