எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் ரூ.50 இலட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள சிந்துவெளி நாகரிகத்தை முதன்முதலில் வெளிப்படுத்திய பிரிட்டிஷ் இந்தியாவின் தொல்லியல் துறை தலைமை இயக்குநர் சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் அவர்களின் திருவுருவச் சிலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (19.3.2025) செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் சென்னை, எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் 50 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சிந்துவெளி நாகரிகத்தை முதன்முதலில் வெளிப்படுத்தி திராவிட நாகரிகம் எனும் கருதுகோளுக்கு வழிவகுத்த பிரிட்டிஷ் இந்தியாவின் தொல்லியல் துறை தலைமை இயக்குநர் சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார்.

சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல்

சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் அவர்கள் இங்கிலாந்து நாட்டின் செஸ்டர் நகரில் 19.3.1876 அன்று பிறந்தார். 1902-ஆம் ஆண்டு தனது 26 வயதில் இந்தியத் தொல்லியல் கழகத்தின் தலைமை இயக்குநராகப் பொறுப்பேற்றார். 1924-ஆம் ஆண்டு செப்டம்பர் 20-ஆம் நாள் வரலாற்று சிறப்புமிகுந்த சிந்துவெளிப் பண்பாட்டின் கண்டுபிடிப்பை உலகுக்கு அறிவித்தார். இந்தியத் துணைக்கண்ட வரலாறு பற்றி அதுவரை நிலவிய புரிதல்களைப் புரட்டிப் போட்டது இந்த அறிவிப்பு. சிந்துவெளிப் பண்பாட்டின் மொழி குறித்த திராவிடக் கருதுகோளுக்கு வித்திட்டார்.
சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் இந்தியத் தொல்லியல் கழகத்தின் தலைமைப் பொறுப்பு வகித்த காலத்திலேயே இங்கிலாந்து நாட்டின் தொல்லியல் அறிஞர் அலெக்ஸாண்டர் ரீ மூலம் ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள் (1903-04) நடைபெற்றன. தமிழ் மண்ணின் தொன்மையை உலகம் அறிவதற்கு வித்திட்ட சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் அவர்கள் 17.8.1958 அன்று மறைந்தார்.

சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் திருவுருவச்சிலை

சென்னை, எழும்பூர் அருங்காட்சியக அரங்கில் 5.01.2025 அன்று நடைபெற்ற சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கு தொடக்க விழாவில் தலைமையுரை ஆற்றிய  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சிந்துவெளிப் பண்பாட்டை கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்ததன் மூலமாக, நம்முடைய வரலாற்றையும், பெருமையையும் நிலை நிறுத்தி காட்டியவர் சர் ஜான் மார்ஷல். அவரைச் சிறப்பிப்பது தமிழ்நாடு அரசுக்குப் பெருமையாகும் என்றும், சிந்துவெளிப் பண்பாடு பேசப்படும் வரைக்கும், ஜான் மார்ஷல் அவர்களுக்கு சிலை வைத்தது திராவிட மாடல் அரசு என்ற பெருமையும் நிலைக்கும் என்றும் புகழஞ்சலி செலுத்தி, பிரிட்டிஷ் இந்தியாவின் தொல்லியல் துறை தலைமை இயக்குநர் சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் அவர்களுக்கு திருவுருவச்சிலை அமைத்திட அடிக்கல் நாட்டினார்.

சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவச் சிலையை  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில்,  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்  தங்கம் தென்னரசு,  தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்  மா. சுப்பிரமணியன்,  இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு. சட்டமன்ற உறுப்பினர்கள்  இ. பரந்தாமன்,  ஏ.எம்.வி. பிரபாகரராஜா, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், இ.ஆ.ப., நிதித் துறை முதன்மைச் செயலாளர் திரு. த. உதயச்சந்திரன், இ.ஆப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே.ராஜாராமன், இ.ஆ.ப., அரசு அருங்காட்சியகங்கள் துறை ஆணையர்  கவிதா ராமு, இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மரு. இரா.வைத்திநாதன், இ.ஆ.ப., உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் ஆர். பாலகிருஷ்ணன், இ.ஆ.ப. (ஓய்வு) மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.