மயிலாடுதுறை: 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும்தனித்தேர்வர்கள் (Private Candidates) தங்களது விண்ணப்பப் பதிவை வரும் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் எச்சரித்துள்ளது. மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார், தரங்கம்பாடி மற்றும் செம்பனார்கோவில் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தனித்தேர்வர்கள் இந்த இறுதி வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தமிழக அரசுத் தேர்வுகள் துறை சார்பில் நடத்தப்படும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுத விரும்பும் நேரடித் தனித்தேர்வர்கள் மற்றும் தோல்வியுற்ற பாடங்களை மீண்டும் எழுத விரும்பும் மாணவர்களுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு நடைபெற்று வருகிறது. இதற்கான கால அவகாசம் வரும் அக்டோபர் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பிக்கத் தவறினால், இந்த ஆண்டிற்கான பொதுத்தேர்வை எழுத முடியாத சூழல் ஏற்படும் என்பதால் தேர்வர்கள் உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் அரசுத் தேர்வுகள் சேவை மையங்கள் (Nodal Centres) மூலமாகவோ அல்லது அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவோ தேர்வர்கள் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். தேவையான சான்றிதழ்கள், புகைப்படங்கள் மற்றும் தேர்வுக்கட்டணத்துடன் நேரில் சென்று விண்ணப்பப் பதிவை உறுதி செய்து கொள்ள வேண்டும். கடைசி நேர நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கல்வித் துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


