மயிலாடுதுறை கடல்பகுதியில் எண்ணெய் கிணறுகள் அமைக்க கடும் எதிர்ப்பு: தமிழக அரசு தலையிட கோரிக்கை!

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மற்றும் தரங்கம்பாடி கடற்கரையை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் புதிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கிணறுகளை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் மீனவர்கள் இடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட டெல்டா பகுதியில், கடல்சார் இயற்கை வளங்களுக்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இத்திட்டம் அமையக்கூடும் என உள்ளூர் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இத்திட்டத்திற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் விவசாய சங்கப் பிரதிநிதிகளும் தீவிர எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் மற்றும் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் ஆகியோர் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ‘ஹைட்ரோ கார்பன் மற்றும் எண்ணெய் கிணறு திட்டங்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும், இ விவகாரத்தில் தமிழக அரசு வெறும் பார்வையாளராக இருக்காமல் உடனடியாக தலையிட்டு இத்திட்டத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும்’ என்றும் வேல்முருகன் மற்றும் பி.ஆர். பாண்டியன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

சீர்காழி, பூம்புகார் மற்றும் தரங்கம்பாடி கடலோரப் பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, நிலத்தடி நீர்மட்டம் நஞ்சாகும் அபாயம் உள்ளதால், காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கும் வகையில் இத்தகைய திட்டங்களுக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும் என்பதே மயிலாடுதுறை மாவட்ட மக்களின் முதன்மையான கோரிக்கையாக உள்ளது.