மீன்பிடி தடைக்காலம் நிறைவு பெற்று கடந்த ஒரு சில நாட்களாகத்தான் மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில்  நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் சென்று நெடுந்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 10 மீனவர்களை கைது செய்து, ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 10 மீனவர்களும் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உடனடியாக அவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களது குடும்பத்தினர் மற்றும் சக மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.