உலக அளவில் பிரபலமான ஆலோசனை நிறுவனமான (பிசிஜி) பாஸ்டன் கன்சல்டிங் குரூப் ‘சர்வதேச மொபிலிட்டி ட்ரெண்ட்ஸ்’ ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வு அறிக்கையின்படி, வெளிநாடுகளில் பணிபுரிய விரும்பும் இந்தியர்களின் எண்ணிக்கை 2020ஆம் ஆண்டு 78 சதவீதமாக இருந்த நிலை மாறி, 2023 ஆம் ஆண்டில் 54 சதவீதமாக குறைந்துள்ளது என்று தெரிய வந்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் பங்களிப்பில் இந்தியா முக்கிய இடத்தைக் கொண்டிருக்கிறது என்று பிசிஜி ஆய்வறிக்கை கூறி உள்ளது.
188 நாடுகளைச் சேர்ந்த ஒன்றரை லட்சம் பேர்களிடம் கேட்டு , பெற்ற பதில்கள் மூலம் இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள பலருக்கு வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வது ஒரு கனவாகவே இருக்கிறது. தொழில் திறமை உடைய வல்லுநர்களில் 23 சதவீதத்தினர் பிற நாடுகளில் தீவிரமாக வேலை தேடுகிறார்கள்.
வெளிநாட்டில் வேலை செய்ய விருப்பம் இருந்தபோதிலும், 59 சதவீத இந்தியர்கள் தாய் நாட்டில் மீதான உணர்ச்சிப் பூர்வமான பற்றுதல் காரணமாக புலம் பெயர விரும்பவில்லை என்று கூறி உள்ளனர். இது மற்ற நாடுகளை விட சராசரியான 33 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு இந்தியர்கள் உலகின் மிகப்பெரிய வெளிநாட்டு புலம்பெயர் மக்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு ஆண்டும், 2.5 மில்லியன் (25 லட்சம்) இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்கின்றனர்.