தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த எப்ரல் 19-ந்தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின் போது பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களின் பெயர் அந்தந்த வாக்குச்சாவடியில் இல்லை என்ற புகார் எழுந்தது. அரசியல் கட்சிகள் சார்பிலும் புகார்கள் கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் அள்ளிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலுக்கு வாக்காளர் பதிவு அலுவலர் (இ.ஆர்.ஓ)தான் பொறுப்பாளர். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின் போது, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் அழைத்து, சேர்க்கப்பட்ட பெயர்கள், நீக்கப்பட்ட பெயர்கள், முகவரி மாற்றம் இவை தொடர்பான விவரங்களை இ.ஆர்.ஓ. அளிப்பார். அந்த விவரங்கள் அனைத்தும் அரசியல் கட்சிகளின் அந்தந்த பகுதி முகவர்களுக்கு தெரியும். எப்போது வேண்டுமானாலும் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா? என்பதை வாக்காளரால் பார்க்க முடியும்..
பெயர் சேர்க்க ஆன்லைனில் விண்ணப்பித்து இருந்தாலும், முகாம்களில் விண்ணப்பம் வழங்கப்பட்டு இருந்தாலும், அவை யாரால் பரிசீலிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டது என்பது போன்ற விவரங்கள் இருக்கும். பெயர் நீக்கப்பட்டிருந்தால், நீக்கத்துக்கு பரிந்துரைத்தவர் விவரமும் அதில் காணப்படும்.
வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பு, செல்போன் எண் இணைப்பு தொடர்பாக கோர்ட்டுகள் பல அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளன. தற்போது ஆதார், செல்போன் எண் ஆகிய விவரங்கள், வாக்காளர்களிடம் இருந்து பெறப்பட்டாலும் அவற்றை இன்னும் இணைக்கவில்லை. அவை இணைக்கப்பட்டால், பெரும்பாலான பிரச்சினைகள் தீர்ந்துவிடும். வாக்காளர் பட்டியலில் இருந்து இரட்டை பதிவுகளை சுத்தமாக நீக்க முடியும் போன்ற தகவல்களை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்ட புகார்களுக்கு வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் ஆய்வு செய்யப்படும் என தேர்தல் துறை அதிகாரி தெரிவித்தார்.