இந்தியாவில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் அட்டவணை கடந்த மார்ச் மாதம் 16-ந்தேதி தேர்தல் கமிஷனால் 7 கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி முதல் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ந்தேதி தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 102 தொகுதிகளுக்கு நடைபெற்றது. இதை தொடர்ந்து ஏப்ரல் 26, மே 7, 13, 20 மற்றும் 25-ந்தேதிகளில் தொடர்ச்சியாக 6 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்தன.

இந்நிலையில் 7-வது இறுதிக்கட்டமாக 8 மாநிலங்களை சேர்ந்த 57 தொகுதிகளில் இன்று (சனிக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பஞ்சாப் மாநிலத்தின் 13 தொகுதிகள் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் 4 தொகுதிகள், உத்தரபிரதேசத்தில் 13 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகள், பீகாரில் 8 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகுதிகள், சண்டிகர் தவிர ஜார்கண்டில் 3 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி உள்பட 904 வேட்பாளர்கள் களம் காண்கிறார்கள்.

இறுதி கட்ட தேர்தலில் 10.02 கோடி பேர் இன்று வாக்களிக்க உள்ளனர். இதற்காக 1.09லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.