நீலகிரியில் 126-வது மலர் கண்காட்சி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 20-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டுகளில் மலர்கண்காட்சிக்கு கவர்னர் அல்லது தமிழக முதல்-அமைச்சர் ஆகிய முக்கிய பிரமுகர்கள் மற்றும் அமைச்சர்கள் வந்து விழாவை தொடங்கி வைப்பார்கள். இந்த ஆண்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், முக்கிய பிரமுகர்கள் யாரும் வரவில்லை. மலர் கண்காட்சியை அரசு தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா தொடங்கி வைக்கிறார். வழக்கமாக 5 நாட்கள் நடக்கும் மலர் கண்காட்சி இந்த முறை 10 நாட்கள் நடப்பதால் பூந்தொட்டிகள் மற்றும் மலர் செடிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. 

விழாவின் முக்கிய அம்சமாக ஒரு லட்சம் கார்னேஷன் மலர்களால் பாரம்பரியமிக்க நீலகிரி மலை ரெயில் உருவமும், சுட்டி குழந்தைகளை கவரும் வகையில் டிஸ்னி வேர்ல்ட் உருவமும் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பூங்காவில் வண்ண மலர்த் தொட்டிகள் பல வடிவங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மலர் கண்காட்சியையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் சுமார் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.